40

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்

பதியிலானே பத்தர் சித்தம் பற்றுவிடா தவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்

மதியலாதா ரென் செய்வாரோ வலிவலமே யவனே

வலிவலம். திருஞானசம்பந்தர்

குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்

போற்றூரடி யார்வழி பாடொழியாத் தென்

புறம்பயம் பூவணம் பூழியூரும்

காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ

ணெரித்தானுறை கோயிலென் றென்றுநீகருதே

பொது. திருஞானசம்பந்தர்

கோவணமுடுத்தவாறுங் கோளர வசைத்தவாறும்

தீவணச் சாம்பர்பூசித் திருவுரு விருந்தவாறும்

பூவணக் கிழவனாரைப் புலியுரி யரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே யெழுதுவாரே

பொது. திருநாவுக்கரசர்

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்

காவ ணத்துடை யானடி யார்களைத்

தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்

கோவ ணத்துடை யான்குட முக்கிலே

தேனார் புனற்கெடில வீரட்டமும்

திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்

வானோர் வணங்கும் மணஞ்சேரியும்

மதிலுஞ்சை மாகாளம் வரா ணாசி

ஏனோர்க ளேத்தும் வெகு ளீச்சரம்

இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்

கானார் மயிலார் கருமாரியும்

கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே

கோவணமோ தோலோ உடையாவது

கொல்லேறோ வேழமோ ஊர்வதுதான்

பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்

பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையே

தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்

திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்

ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்

அறியேன்மற் றூராமா றாரூர் தானே

பொன்நலத்த நறுங் கொன்றைச் சடையி னான்காண்

புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்

மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்

வேதியன்காண் வெண்புரிநூல்மார்பி னான்காண்

கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்

கோலமா நீறணிந்த மேனி யான்காண்

செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்

திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே

பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப்

பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்

கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்

காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை

இருங்கனக மதிலாரூ மூலட் டானத்

தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்ததும்

அருந்தவனை அரநெறியி லப்பன் தன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்

பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க

தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்

தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்

பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்

பொருப்பதன்கீழ் நெரித்தருள் செய் புவனநாதர்

மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்

வீழி மிழலையே மேவினாரே

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்

புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்

கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்

குளிராந்த செஞ்சடை யெங் குழக னாருந்

தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துத்

திருவிரலா லடத்தவனுக் கருள்செய் தாரும்

மின்னலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்

புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்

வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்

வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி

நிலமலிநெய்த் தானத்தோ டெத்தானத்தும்

நிலவு பெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்

கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற

கயிலாய நாதனையே காண லாமே

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ

டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்

பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்

பராய்த்துறையும் வெண் காடும்பயின்றான் தன்னைப்

பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்

பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்

சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான தன்னைத்

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

பெரியபுராணம்

நீடுதிருப் பூவணத்துக் கணித்தாக நேர்செல்ல

மாடுவருந் திருத்தொண்டர் மன்னியஅப் பதிகாட்டத்

தேடுமறைக் கரியாரைத் திருவுடையார் என்றெடுத்துப்

பாடிசையிற் பூவணமீ தோஎன்று பணிந்தணைவார்சுந்தரர்

மீனட்சியம்மை குறம்

கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று

குற்றாலம் ஆப்பனூர் பூவணநெல் வேலி

ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழியல்

இராமேசந் திருப்புத்தூ ரிவைமுதலாந் தலங்கள்

நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி

நன்னாடும் பிறநாடும் என்னாடதாகக்

காடுமலையுந் திரிந்து குறி சொல்லிக் காலங்

கழித்தேனென் குறவனுக்குங் கஞ்சிவாரம்மே

குமரகுருபரசுவாமிகள்

தனிப்பாடல்

தலையி லிரந் துண்பான் தன்னுடலிற் பாதி

மலைம களுக் கீந்து மகிழ்வான்

உலையில் இருப்புவண மேனியனார் என்றாலோ

ஆம் ஆம் திருப்பூவணநாதர் திறம்

ஜமீன்தார் ஒருவர் (பெயர் குறிப்பிடப்பெறவில்லை) இப்பாடலின் முதல் இரண்டு அடிகளை மட்டும் பாடிவிட்டுப் பாடலை முடிக்காமல் நிறுத்தி விட்டார். அப்போது அவர் வீட்டில் களவு செய்யச் சில கள்வர்கள் வந்திருக்கின்றனர். வருமையின் காரணமாகப் பொருள் வேண்டிய புலவர் மருதூரந்தாதி தலைமலைகண்டதேவர்என்பவர் கள்வர்களுக்குத் துணையாக வந்திருக்கிறார். ஜமீன்தாரின் பாடல் பாதியில் நின்றதைக் கேட்ட புலவர். மூன்றாவது வரியைப் பாடியுள்ளார். உடனே ஜமீன்தார் நான்காவது வரியைப் பாடிப் பாட்டை முடித்துள்ளார். இவ்வகையில் கள்வர்களைக் களவு செய்யவிடாமல் தடுக்கும் வகையிலும். ஜமீன்தாரின் பாடல் நிறைவு பெறும் வகையிலும். புலவர் செயலாற்றியுள்ளார். இதனைப் பாராட்டிய ஜமீன்தார் அவருக்குப் பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார். – அடிகளாசிரியர். சரசுவதி மகால் வெளியீடு. எண் 126. தஞ்சாவூர். 1968.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book